அரங்கைப் பேசுதல்
தொல்காப்பியம் கூறும் மெய்ப்பாட்டியலும் மனிதமனதின் இயங்கியலும்
ஒலியியல், உருவவியல், பொருளியல் என்பவற்றைப் பகுத்தாய்ந்து அதன் இயக்கத்தைக் கட்டமைப்பு ரீதியாக ஆய்வதும், அவை எப்படிப் பொருள் தருவனவாக அமைகின்றன என்பதை ஆய்வதும் இலக்கண நூல்களினது அடிப்படைக் கூறுகளாகும். இவ்வணுகுமுறையானது அனைத்து மொழிகளுக்கும் பொதுவானது.
எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் செய்தது போலவே பொருளுக்கு இலக்கணம் செய்தல் என்பது எளிதன்று. மனிதனுடைய மன வெளிப்பாட்டினைப் பகுத்தாய்ந்து, அதன் அடிப்படை மூலக்கூறுகளை இனங்கண்டு, அக்கூறுகளை ஒழுங்குபடுத்தி அதற்கு இலக்கணம் வகுத்தல் வேண்டும்.
மனித மனத்தினுடைய வெளிப்பாடுகள் பல விதமானவை. ஒரு மனதைப் போல மற்றொரு மனம் இருப்பதில்லை. பெரும் பரப்பைக்கொண்டு இயங்கும் மனித மனத்திற்கு இலக்கணம் வகுத்ததே பொருளதிகாரத்தின் சிறப்பு.
அனைத்துப் பொருள் வெளிப்பாடும் உலகியல் வழக்காகும். அவை புனைவின் அடிப்படையில் இலக்கிய வழக்காகின்றன. இவ் இலக்கிய வழக்கினை இலக்கணப் படுத்துவதற்கான அணுகுமுறை என்பது உலகரீதியாக பொதுமைப்படுத்தப்பட்டதாகவும், அங்கீகரிக்கப்பட்டதாகவும் அமைந்திருக்க வேண்டும். பொருள் சார்ந்து இலக்கணப்படுத்தப்பட்ட கூறுகள் எந்த வகையிலும் மாற்றியமைக்கமுடியாத ஒழுங்குவிதிகளைக் கொண்டதாகவும் அமைந்திருத்தல் வேண்டும்.
இவ் ஒழுங்கமைப்பின் அடிப்படையிற்தான் தொல்காப்பியம் மனிதமனத்தின் இயங்கியலை அடிப்படையாக்கி பொருளுக்கும் கட்டமைப்பு செய்திருக்கின்றது. அனைத்து மனித மனங்களிற்கும் பொருந்தும் வகையில் இலக்கணம் செய்யமுடிந்ததற்கான தொல்காப்பியத்தின் அடிப்படைக் கூறு இதுவே.
மனத்தின் இருமைநிலைக் கோட்பாட்டினூடு பொருள் புலப்படும் முறையை, பிரஞ்சு நாட்டினைச் சேர்ந்த மானுடவியலாளர் லெவி ஸ்ட்ராஸ் 1900களில் ஆய்வுசெய்திருக்கின்றார்.
மனித மனம் எப்போதும் இரண்டு எதிர்ப்பதங்களை வைத்தே ஒரு விடயத்தை விளங்கிக்கொள்ள முயற்சிக்கிறது. எதிரெதிர் பொருளோடு ஒப்புநோக்கி ஒரு விடயத்தைப் புரிந்துகொள்வதே மனதின் அடிப்படை இயக்கம். இது மனித மனத்தின் இயங்கியல் எனப்படுகிறது.
மேற்குறிப்பிட்டதன் அடிப்படையில் அனைத்து மெய்ப்பாடுகளும் தொல்காப்பியத்தில் ஒரு ஒழுங்குமுறையில் விரிவுபடுத்தி காட்டப்பட்டுள்ளன.
அடிப்படையுணர்வுகள் நான்கு, அதன் எதிர் உணர்வு நிலைகள் நான்கு என தொல்காப்பியம்; ஆய்ந்தறியும் முறை தமிழ் மரபிற்குச் சிறப்பானது. மெய்பாடுகளை ஒழுங்கமைத்திருக்கும் முறையிலும், இலக்கிய கட்டமைப்பை எடுத்துரைக்கும் அணுகுமுறையிலும் பொருளதிகாரம் மனதின் இருமைநிலைக் கோட்பாட்டின் அடிப்படையை அறிமுகம்செய்கிறது.
மனத்தின் இருமைநிலைக் கோட்பாட்டின் அடிப்படையில், பொருளதிகாரத்தை அணுகும் தொல்காப்பியம் வடமொழி வழக்கிலிருந்தும் வேறுபடுகிறது. இவ்வகையில் தொல்காப்பியம் இயம்பும் மனித மனத்தின் இயங்கியலை, அதன்வழி தமிழ்ச் சிந்தனை ஓட்டங்களைக் கண்டறிவதும், வடமொழி மூலநூல்களுக்கும் தமிழ் மூலநூல்களுக்கும் இடையில் உள்ள சிந்தனை வேறுபாடுகளைக் புரிந்துணர்வதும் இந்த அரங்கின் நோக்கமாக நோக்கமாக அமையவிருக்கிறது.
கவிதா லட்சுமி
....