ஒரு
கவிஞராகவும் இலக்கியத் தேடல் மிக்க ஒருவராகவும் இருப்பதால் மட்டும் கவிதா இத்தகைய
புதிய படைப்பு முயற்சிகளை முன்னெடுக்கின்றார் என்று தோன்றவில்லை. புலம்பெயர் இளைய
தலைமுறையினருக்கு தமிழ் இலக்கியங்களையும் அவற்றின் மேன்மைகளையும் எளிய வடிவங்களில்
அறிமுகம் செய்கின்ற அக்கறையின் வெளிப்பாடாகவுமே என்போன்றவர்களால் இதனைப் பார்க்க
முடிகின்றது.
பரத நாட்டியக் கலை வெளிப்பாடுகளுக்கான கதைக்களங்களை புராண இதிகாசங்கள் என்ற வட்டத்திற்கு அப்பால் சென்று, தமிழ் இலக்கியங்களிலிருந்து அவற்றுக்கான பேசுபொருளையும் கதைகளையும் அடையாளம் கண்டு நடனக் கலைப் படைப்புகளை உருவாக்குபவர்கள் அரிதெனலாம். அத்தகையை முயற்சிகளை நோர்வே நாட்டில் தொடர்ச்சியாகப் பிரக்ஞைபூர்வமாக முன்னெடுத்து வருபவர் கவிதா.
அவர் தமிழ் இலக்கியங்களிலிருந்து கருவையும் உருவையும் எடுத்துக் கையாள்வதன் ஊடாகத் தன்னிடம் ஆடற்கலை பயிலும் மாணவர்களின் ஆடல் அரங்கேற்ற நிகழ்வுகளையும், நடன நாடகப் படைப்புகளையும் தந்து கொண்டிருப்பவர்.
'தமிழ் இலக்கியத்தில் பெண்' என்பதை மையமாகக் கொண்டு அவரது மாணவியொருவரின் அரங்கேற்றம் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. முழுவதும் 'பாரதி பாடல்களுடன்' 2017ம் ஆண்டு அவரது இரு மாணவிகளின் அரங்கேற்ற நிகழ்வினை நெறியாள்கை செய்திருந்தார்.
பரத நாட்டியம் வெறுமனே ஒரு அழகியல் கலை மட்டுமல்ல. அந்த வரையறைக்குள் மட்டும் அதனைச் சுருக்கிவிட முடியாது. அது ஒரு கலை ஊடகம். அதனூடாகச் சமூக விதாதத்திற்குரிய விடயங்களையும் முன்வைக்க முடியும் என்றும் வலியுறுத்தும் கவிதாவின் பார்வைக்கான சான்றாக அவரது இத்தகைய படைப்பு முன்னெடுப்புகள் அமைகின்றன.
மகாபாரதமும் ராமாயணமும் இல்லாமல் நாட்டிய நிகழ்வுகளை நடாத்த முடியும் என்பதையும் அவற்றைத் தாண்டிய தேடல் மிக்க புத்தாக்க முயற்சிகள் அவசியமானவை, ஆரோக்கியமானவை என்ற கருத்தை மீண்டுமொருமுறை மெய்ப்பித்திருக்கின்றார் கவிதா. அவரது கலா சாதனா கலைக் கூடத்தின் 15வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு 08.10.16 நடைபெற்ற 'அரங்கம் 2016' நிகழ்வில் புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற 'சிற்பியின் நரகம்' சிறுகதையினைக் கையிலெடுத்திருந்தார் கவிதா. நடன நாடக அரங்க நிகழ்வாக 'சிற்பியின் நரகம்' உருவாக்கியிருந்தமையைக் காணக் கிடைத்தது.
நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாகக் கருதப்படுபவர் புதுமைப்பித்தன். சமூக விமர்சனங்களையும் முற்போக்குச் சிந்தனைகளையும், பெண்களின் பிரச்சினைகளையும் பேசுபொருளாகக் கொண்ட நூற்றுக்கணக்கான சிறுகதைகளைத் தமிழ் இலக்கியத்திற்குத் தந்த படைப்பாளி.
சிற்பியின் நரகம் சிறுகதையின் களம் காவிரிப்பூம்பட்டின காலம். பக்திமரபிற்குப் பினனரான கோயில்கள் பிரமாண்டமாக நிறுவனமயமாக்கப்பட்ட காலம். சாத்தன் (சிற்பி - படைப்பாளி), பைலார்க்ஸ்: (கிரேக்கத்து மனிதரும் கடவுள் மறுப்பாளரும்) ஒரு சாமியார் ஆகியோர் கதையின் முதன்மைப் பாத்திரங்கள்.
சாத்தன் ஒரு சிற்பத்தினைச் செதுக்குகின்றான். பல காலமாய் மெனக்கெட்டு அழகியலும் கலைத்துவமும் அர்த்தசிருஸ்டியுமுடையதாக அச்சிற்பம் படைக்கப்படுகிறது. தனது உச்சக் கலைப்படைப்பான நடராஜர் சிற்பத்தை தனது நண்பர்கான பைலாக்கஸ் மற்றும் சாமியார் இருவரிடமும் காண்பிக்கிறான். நடராஜர் சிற்பத்தைப் பற்றி விளக்கும் போது இந்தப் பிரபஞ்சம் என்பது வெற்று வெளியல்ல. மனிதர்களுக்குத் தெரியவேண்டியதெல்லாம் ‘அண்டவெளியெங்குமுள்ள ஆட்டமே. அண்டவெளி ஆட்டமே கூத்து’ என தனது படைப்பிற்கு விளக்கமளிக்கிறான்.
இந்தச் சிற்பப் படைப்பு முடிவடையும்போது சாத்தனுக்கு வயது எண்பது. ஆனால் தனது இருபதாவது வயதிலிருந்தே தன் அனுபவங்களையெல்லாம் திரட்டி இந்தப் படைப்பினைச் செதுக்கி முடித்திருந்தான். மக்கள் தனது படைப்பை கலைத்துவ உணர்வுடனும், அதன் உள்ளார்ந்த அர்த்தப்பெறுமதியுடனும் பார்ப்பர் என்ற பெருவிருப்புடன் தன் படைப்பின் உச்சமான ஆடலரசனின் சிற்பத்தை அரசனின் கோவிலுக்குத் தான் அனுப்பப் போவதாக சாத்தன் அறிவிக்கின்றான்.
பைலாக்கஸ் சயக் கருத்துக்களை மறுப்பவன். மனித விழுமியங்களை முன்னிறுத்துபவன். கடவுள் மறுப்பாளன். சாத்தனின் கூற்றைக் கேட்டதும் இது அசட்டுத்தனம் என்றும், அரசனின் கோவிலுக்கு பதில் அரசனின் அந்தப்புறத்துக்கு அனுப்பினாற்கூட அர்த்தமுண்டு. அல்லது உடைத்து எறிந்தாலும் அதற்கு அர்த்தமுண்டு என்றும் கோபங்கொள்கிறான்.
கோவிலின் மூலஸ்தானத்தில் இச்சிற்பத்தை வைத்தால், இருட்டில் அதன் பொலிவையும் அதன் கருத்தையும் இழந்து வெறும் மோட்சம் தரும் சிலையாகிவிடும் என்பது பைலாக்ஸின் கருத்து. அவன் அத்தோடு அங்கிருந்து புறப்பட்டுவிடுகின்றான்.
நாட்கள் செல்ல, கும்பாபிசேகம் செய்யப்பட்டு சிற்பம் கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்படுகிறது. தன் படைப்பை ரசிக்கும் முகங்களை தூர நின்று பார்த்து மகிழும் ஒரு சராசரி படைப்பளியைப் போலவே சாத்தனும் கோயிலின் ஒரு ஓரத்தில் நின்று கவனிக்கின்றான்.
அகண்டவெளியும், அந்தப் புன்சிரிப்பும், தாளத்தோடு நடனமும், அவனது படைப்பும் அதன் உயிரும் அவனது மனதில் எழுகின்றன. அந்த எண்ணத்தோடே மகிழ்ச்சியோடு கோவிலின் கதவைத் திறக்கின்றான். கோவிலினுள் இருள். சூனியம் போலக் கனத்த இருட்டு.
மங்கிய தீப ஒளியில் மக்கள் குனிந்தபடியே வருவதும் போவதுமாய் இருந்தனர். அவர்கள் அச்சிலையின் முன் தமது கண்களை மூடிக்கொண்டனர். ”எனக்கு மோட்சம்” என்பதே அங்கு அனைவருடைய குரலாகவும் இருந்தது. மோட்சம் என்பதே அவர்களுடைய தேவையாயிருந்தது. சிலை இருட்டில் பொலிவிழந்து நிற்கிறது. தனது படைப்பை வெறும் மோட்சம் தரும் சிலையாய் மாற்றியதைக் கண்டு சிற்பி துவள்கின்றான். உத்தரிக்கின்றான்.
காலங்கள், நீண்டு கடக்கின்றன. ஆனாலும் மக்கள் ஒருபோதும் அந்தச் சிற்பத்தின் கலைத்துவத்தையோ, அதன் கருத்தினையோ ரசிக்கவில்லை. அண்டவெளிக் கூத்தினையே கடவுட் கருத்தாக முன்வைக்கப்பட்ட படைப்பினையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. அங்கே இப்போது இருப்பது உயிருள்ள அவனது சிற்பமல்ல, அந்தச் சிற்பத்தில் கவர்ச்சிக்கும் புன்னகையில்லை என்று அவனுக்குத் தோன்றுகிறது. அதை யாரும் ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை.
இக்கதையின் நேரடியான உட்பொருளும் பிரதிபலிப்பும் நடராஜர் சிற்பக் படைப்பின் பின்னால் உள்ள அதன் கலையை, அழகை, பொருளை, தத்துவத்தை விளங்கிக்கொள்வில்லை என்பது. படிமங்களாலான இந்தக் கதை, கலைப்படைப்புகள் தொடர்பான பரந்துபட்ட ஆழமான பிரதிபலிப்பினையும் கொண்டுள்ளது. ஒரு உன்னதமான கலைப்படைப்பிற்கான அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு, மெனக்கெடல் என்பதை ஒரு கோணத்திலும், அந்தப் படைப்பின் கலைத்துவ அழகியலையும், அது வெளிப்படுத்தி நிற்கும் கருத்தியலையும், தத்துவத்தையும் உணரத் தலைப்படாத போக்கினையும் பொதுத்தன்மையுடனும் பிரதிபலிக்கின்றது.
ஒரு கவிஞராகவும் இலக்கியத் தேடல் மிக்க ஒருவராகவும் இருப்பதால் மட்டும் கவிதா இத்தகைய புதிய படைப்பு முயற்சிகளை முன்னெடுக்கின்றார் என்று தோன்றவில்லை. புலம்பெயர் இளைய தலைமுறையினருக்கு தமிழ் இலக்கியங்களையும் அவற்றின் மேன்மைகளையும் எளிய வடிவங்களில் அறிமுகம் செய்கின்ற அக்கறையின் வெளிப்பாடாகவுமே என்போன்றவர்களால் இதனைப் பார்க்க முடிகின்றது.
கவிதாவிடம் பயிலும் மாணவிகளுடன் தமிழ்க்கல்வி முன்னோடி சிவதாஸ் மாஸ்ரர் (கவிஞர் சோதியா) 'சிற்பியின் நரகம்' நடன நாடகத்தில் முக்கிய பாத்திரமேற்றிருந்தார். அவர் முறைப்படி நடனம் பயின்றவர். அவருடைய நடிப்பு, நடன ஆற்றுகை, முகபாவங்களும், உடல்மொழியும் அவருடைய கலைத்திறனையும் ஆளுமையையும் வெளிப்படுத்தி நின்றது. நான் அறிந்த வகையில் கிட்டத்தட்ட 25 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் அவர் கால்களில் சலங்கை கட்டியிருக்கின்றார் என எண்ணுகிறேன். இயல்பினை மீறாத அவரது ஆற்றுகையும் நடிப்பும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.
கலைக் கூடத்தின் அனைத்து மாணவர்களும் 'சிற்பியின் நரகம்' நடன நாடகத்தில் பங்கேற்றிருந்தனர். 'சிற்பி' பாத்திரமேற்றிருந்த சிவதாஸ் மாஸ்ரருடன் 'யவனன் பைலார்க்கஸ்' மற்றும் 'பரதேசி' ஆகிய முக்கிய பாத்திரமேற்றிருந்த இளைய நடன ஆளுமைகள் அதிகம் கவனிக்கப்பட்டிருந்தனர். அத்தோடு காட்சிகள் முழுமை பெற உயிர்ப்புமிக்க நடன ஆற்றுகையினை வழங்கியிருந்த ஏனைய மாணவிகளின் திறமையும் பாராட்டுக்குரியது.
இந்தப் படைப்பிற்கான நாடக வடிவமும் இசையும் ஒளியமைப்பும் குறிப்பிடப்படவேண்டியவை. தொய்வற்ற முறையில் காட்சிகள் நகர்ந்தன. அழுத்தமும், சூழ்நிலைகளுக்குப் பொருத்தமானதுமாக இசைக் கோர்வையும் பாடல்களும் அமைந்திருந்தன. மேடையில் 'கடல்' காட்சியாகக் கொண்டுவரப்படப் பயன்படுத்தப்பட்ட உத்தி, கலைநேர்த்தி, அதற்கூடாகக் கிடைத்த காட்சியின்பம் அலாதியானது.
'அரங்கம் 2016' நிகழ்வின் முதற்பகுதி பல குறு நடனங்களால் நிறைந்திருந்தது. அனைத்தும் குழு நடனங்களாக மேடை முழுதும் இளைய நடன மாணவிகளால் வியாபித்திருந்தது. மலர் வணக்கம், அலாரிப்பு நடனம், அபிநயப் பாடல் நடனம் எனத்தொடங்கி பாரதி பாடல்கள் சிலவற்றுக்கான நடனங்கள், ஈழத்து இலக்கியங்களில் ஒன்றான 'கனகி புராணம்' ஆகியனவற்றுடன் தொய்வில்லாமல் தொடர்ந்து தில்லானாவுடன் விறுவிறுப்பாக முடிவடைந்தது அரங்க நடனங்களின் முதற்பகுதி.
இந்த முதற்பகுதியில் நோர்வேஜியர்களின் தொன்மத்தையும், வளங்களையும் சொல்லும் ஒரு புகழ்பெற்ற பாடலுக்கான நடனமொன்று இடம்பெற்றது. வாழும் நாட்டின் மொழிக்கூடாக ஆடல் கலையை வெளிப்படுத்தி, அதனை நோர்வேஜிய மற்றும் ஏனைய மொழிப் பின்னணியுடைய சமூகத்திற்கும் அறிமுகப்படுத்துதல் என்ற எண்ணத்தினது வெளிப்பாடாக இதனைப் பார்க்க முடிந்தது. அது மட்டுமல்ல நோர்வேஜிய பாடல், இசை உட்பட்ட இலக்கியங்களைத் தமிழர்களுக்குப் பரிட்சயப்படுத்துவது என்ற ஒரு பக்கமும் இதற்கு உள்ளதாக உணர்கிறேன்.
குளிர் சூழ்ந்த நோர்வே தேசத்தின் மூத்த குடிகள் எப்படி வாழ்ந்தார்கள், கடினமான காலநிலைக்கு மத்தியில் எப்படியாகத் தமது வாழ்வைக் கட்டியெழுப்பினார்கள் என்ற உணர்வுபூர்வமான விடயங்களைப் பேசுபொருளாகக் கொண்ட பாடல் அது. நோர்வேயின் முக்கிய இலக்கியகர்த்தாக்களில் ஒருவரான Ivar Aasen (05.08.1813 - 23.09.1896) அவர்கள் எழுதிய பாடல் இது. மொழியியல் ஆய்வாளர், கவிஞர், எழுத்தாளர், தத்துவவியலாளர் என்ற பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர் Ivar Aasen.
புலம் பெயர் வாழ்வென்பது ஒரு பல்லினப் பண்பாட்டு, சமூக வாழ்வியல் பங்குபற்றலை இயல்பாகக் கோருகின்றது. ஏனைய மொழிப் பின்னணியுடைய சமூகத்தவர், நோர்வேஜிய பெரும் சமூகத்துடனான உறவும், உரையாடலும் முக்கியத்துவம் பெறுகின்றது. கலைகளும் அதற்கு விதிவிலக்கல்ல. தனித்துவ அடையாளங்களைப் பேணுவதுடன், புத்தாக்க சிந்தனையுடன் கூடிய படைப்பாற்றல் மிக்க கலை இலக்கியப் படைப்புகளும் பகிர்தல்களும் நிகழ்ந்தாக வேண்டியது நன்மைகளை விளைவிக்கும்.
இந்தக் குறிப்பினை எழுதுவதற்காக கவிதாவுடன் உரையாடிய போது ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார். அதாவது, இளைய தலைமுறையினர் தேடலும் புத்தாக்க சிந்தனையுமுடையவர்களாக உள்ளனர். அவர்களின் ரசனைக்கும் தேடலுக்கும் தீனியாக உயர்ந்த தரத்தில் கலைப் படைப்புகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. மகாபாரதமும் இராமாயணமும் போன்ற அரைத்த மாவை அரைக்கும் போக்கிலிருந்து விடுபடுதல் அவசியம் என்ற கருத்தினைப் பகிர்ந்து கொண்டார்.
வாழும் நாடுகளின் பெருஞ்சமூகத்திற்கு பரதக்கலையினை எடுத்துச்செல்வதற்கும், இவ்வாறான புத்தாக்க படைப்பு முயற்சிகள் தேவைப்படுகின்றன. சமூகப் பிரதிபலிப்பு மிக்க படைப்புகளாக உருவாக்கப்படும் போதே அந்த நோக்கத்தினைச் சாத்தியமாக்கலாம் என்றும் கூறுகின்றார் கவிதா.
சிறுகதையொன்றினை அழகியல் அம்சங்களுடன் நேர்த்தியானதொரு நடன நாடகமாக்குவதென்பது அரிதாக நிகழக்கூடியது. கடினமான காரியம். சவாலானதும்கூட. 'சிற்பியின் நரகம்' எதிர்பார்ப்பிற்கு மேலாக தரம் மிக்கதாக, கலைநேர்த்தியும் அழகியலும் நிறைந்தாக ஆற்றுகை செய்யப்பட்டிருந்தது.
1935ஆம் ஆண்டு காலப்பகுதியில் எழுதப்பட்ட ஒரு சிறுகதை இது. ஆனபோதும் இந்தக் கதையின் பேசுபொருள் இன்றைய காலத்திற்கும் அசசொட்டாகப் பொருந்திப் போகின்றது என்பது இதன் சிறப்பு. அதிலிருந்த சமகாலச் சமூகப் பிரதிபலிப்பும் இதனை நடன நாடகமாக்கும் முனைப்பிற்கான உந்துதலாக இருந்திருக்கிறது.
புதிய முயற்சி என்ற பரிமாணம் கவிதாவின் இந்த நடன நாடகத்திற்கு இருந்தது. தத்துவ விசாரணைகள் நிறைந்த ஒரு சிறுகதை என்பதால் அதற்குள் சுவாரஸ்யங்கள் இருந்தன. நாடகத்திற்குரிய வகையில் பாத்திரங்களுக்கிடையிலான முரண்கள் கட்டமைக்கப்பட்ட சிறுகதை என்பதால் உரையாடல்களிலும், காட்சிகளிலும் விறுவிறுப்பு இருந்தது. மேடை முழுவதும் எல்லா நேரமும் அழகியல் நிறைந்திருந்தது.
இவ்வாறான முயற்சிகள் நடனக் கலையின் தரமுயர்த்தலுக்கும் - அதற்குப் புதிய பரிமாணங்களை ஏற்படுத்துவதிலும் - சமூக அக்கறையின் பிரதிபலிப்பிற்கும் பங்களிக்கின்றன என்பது எனது அபிப்பிராயம்.
இது போன்ற படைப்பு முயற்சிகளை ஒரு மேடையோடு நின்றுபோக விடுவது பொருத்தமல்ல. இதற்குப் பின்னாலுள்ள உழைப்பு எத்தகையது என்பது புரிந்து கொள்ளக்கூடியது. இதன் உருவாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலம் நீண்டது. இதற்குள் பெரும் பொருட்செலவு உள்ளது. பல அரங்கங்கள் காண வேண்டிய படைப்பு இது என்பது என்போன்றவர்களின் விருப்பாக உள்ளது.
ஒக்ரோபர் 2016,
காக்கைச் சிறகினிலே
பொங்குதமிழ் இணையம்
ஒக்ரோபர் 2016,
காக்கைச் சிறகினிலே
பொங்குதமிழ் இணையம்
நூல்: கலைப்பேச்சு
created with
WordPress Website Builder .